Tuesday, August 30, 2005

 

Madras University

பல்கலைக்கழக பரீட்சை என்றாலே ஒருவித பயம் மனதுக்குள். ஏனென்றால் எவ்வளவு நன்றாக எழுதியும் மதிப்பெண் சரியாக வராததுதான்; சில சமயங்களில் அபத்தமாக 20 மார்க் வரும் என்று நினைப்பவருக்கு 70 மார்க் வந்துவிடும்; சிலருக்கோ 70 மார்க் வரும் என்று எதிர்பார்ப்பவருக்கு 20 மார்க் வரும். இந்த நிலைமைக்கு யார் காரணம்? ஏன் நடக்கிறது? என்று ஆராய்ந்தோமானால் ஏமாற்றமே மிஞ்சும்.

என்னுடைய உறவினரின் மகள் சமீபத்தில் B.Sc Maths இறுதியாண்டு பரீட்சை முடித்துவிட்டு வழக்கம்போல் ரிசல்ட்டுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள். நீ நன்கு படிக்கக்கூடியவள்; ஆகையால் ஏன் இப்படி பதட்டத்துடன் இருக்கிறாய் என்று வினவிக்கொண்டிருந்தார்கள். ரிசல்டும் வந்தது; எல்லாவற்றிலும் நல்ல மதிப்பெண்கள், ஒரு பேப்பரில் மட்டும் 30 மதிப்பெண்கள் என்று இருந்தது. அவ்வளவுதான், தான் பரீட்சையில் தோல்வியடைந்துவிட்டோம் என்று அழ ஆரம்பித்துவிட்டாள். குறை கூறும் நக்கீரர்களுக்கு சொல்லவும் வேண்டுமோ? துக்கம் விசாரிப்பதுபோல விசாரித்தார்களாம்.

ஆனால் அவள் மனதுக்குள் தான் நன்கு எழுதியதாகவே கூறிகொண்டிருந்தாள். எனவே கல்லூரியை நாடியபோது, நீங்கள் நேரிடையாக யுனிவர்சிட்டியில் சென்று மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்கள். அதன்படியே விண்ணப்பித்தாள்; அதற்குள் அக்டோபர் மாதத்தில் தவறிய தாள்களை எழுத விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரியில் கூறியதால் அதற்கும் பணத்தை கட்டி விண்ணப்பித்தாள் அழுதபடியே!

இதற்கிடையே டோட்டல் மிஸ்டேக் என்று ஆங்கிலத்தில் கூறி மதிப்பெண்ணை மாற்றி சான்றிதழ் அளித்தனர். இப்பொழுது அவள் சந்தோஷமாக ஒரு வேலைக்கும் சென்றுக்கொண்டிருக்கிறாள்.
ஆனால் வழக்குரைஞர் பாஷையில் எவ்வளவு மன உளைச்சல், பண விரயம், நேர விரயம். இவற்றையெல்லாம் ஈடு செய்ய ஒரு கேஸ் போடக்கூடாதா என்று பலர் கேட்கின்றனர். அதற்கு அவள் அப்பா கூறிய பதில்: கேஸ் போட்டு என்ன பயன்? கோபத்தில் நாங்கள் மீண்டும் தவறான மதிப்பெண் அளித்துவிட்டோம் என்று இதனையும் மாற்றி விட்டால்..? என் பெண்ணின் நிலைமை என்னாகும்? எனவே கேசாவது ஒரு மண்ணாவது..

Saturday, August 13, 2005

 

Dialogue

அடி செருப்பால அவன் என்ன என்னை கேள்வி கேட்கறது?
இன்னும் பத்து நிமிஷத்தில் வந்துருவேன்; அடையார் பிரிட்ஜில் இருக்கேன்.
ஆமா! போன மாசம் ஏன் சேல்ஸ் ரொம்ப டல்லா இருந்தது? இந்த மாசம் உன் டார்கெட்டை அஷோக் டிசைட் செய்யக்கூடாது ஓ.கே வா?
சரி உனக்கு என்ன வாங்கி வரட்டும்? பூவா? ஸ்வீட்டா? சீக்கிரம் சொல்லு..
என்னடா மச்சி இப்படி தூங்கும்போது டிஸ்டர்ப் பண்ற? சொல்லு
என்னடா இப்ப எங்கே இருக்கே? இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?
சரி நாளைக்கு காலையில எட்டு மணிக்கு நான் அண்ணா யுனிவர்சிட்டி வாசல்ல இருப்பேன். போதுமா?
அண்ணா யுனிவர்சிட்டி ஒன்னு குடுங்க.
அய்யோ அந்த மேஸ்திரி ரொம்ப மோசங்க; சரியாவே வேலை செய்யமாட்டான், அவனை முதல்ல மாத்துங்க.. சரியான திருடுங்க அவன்.
பேசியது போதும் முன்னாடி போங்க.. எவ்வளவு இடம் காலியா இருக்கு..

இவை அனைத்தும் தனித்தனி நபர்கள் ஒருசேர இறைச்சலுக்கு இடையில் பேருந்தில் செல்பேசியில் பேசிய,கத்திய,கொஞ்சிய,பாடிய வசனங்களாகும்.

Tuesday, August 09, 2005

 

Pa. Vijay

சன் டி.வியின் தமிழ் மாலையில் பா.விஜயின் கவிதைத் தொகுப்புத் திருவிழாவிலிருந்து சில காட்சிகளை சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பினார்கள். ஒவ்வொரு தலைப்பு வீதம் மொத்தம் பன்னிரண்டு நூல்களை டாக்டர். கலைஞர் வெளியிட்டார்.

திருவிழா ஒரே அபத்தமாக இருந்தது. பாக்யராஜ் தான் அறிமுகப்படுத்திய ஒருவருக்கு திருவிழா என்பதில் பெருமைப்படுவதாகக் கூறினார். மேடையில் பலர் வந்து பேசினர். இதில் அபத்தத்தின் உச்சக்கட்டம் விவேக். யாருடைய கவிதைத் தொகுப்பை வெளியிடுகிறார்கள் என்றே தெரியாத அள்விற்கு விவேக் ஒரே கலைஞரைப் பாராட்டிக்கொண்டேயிருந்தார். அவ்வப்போது பா.விஜயைப் பற்றியும் பேசினார். வழக்கம்போல் திருமதி.ராதிகா டமிலை கொளை செய்து பேசினார். கமல்ஹாசன் தான் எவ்வாறு தமிழ் பயின்றேன் என்று விளக்கினார். கவிஞர் வாலியையும்,கலைஞரையும் பாராட்டிக்கொண்டேயிருந்தார். நடுவில் நடிகர் ஸ்ரீகாந்த்தையும் கூப்பிட்டு பேச வைத்தனர். கவிஞர் வாலியோ கலைஞருக்கு கவிதை வாசித்து அமர்ந்தார்.

அனைவரும் பேசிய பிறகு கலைஞர்தான் உண்மையாகவே பா.விஜய்க்கு பாராட்டு பத்திரம் வாசித்து வித்தகக் கவிஞர் என்று பட்டம் சூட்டினார். காமடியாக பேசுவதாக எண்ணி காமநெடியுள்ள ஆண்டொனி, கிளியோபாட்ரா கவிதையை பா.விஜய் எழுதியுள்ளதை எண்ணி புளகாங்கிதப்பட்டுக்கொண்டார். எண்பத்து இரண்டு வயதில் இம்மாதிரியான கவிதையை தானே ரசிப்பதாகவும் மற்ற அனைவரும் இன்னும் ரசிப்பார்கள் என்று கூறி திருவிழாவை முடித்து வைத்தார்.

This page is powered by Blogger. Isn't yours?