Thursday, June 30, 2005

 

Share Auto

ஷேர் ஆட்டோவில் பயணம் என்றால் பொடிசுகள் முதல் பெரிசுகள் வரைக்கும் அலாதி பிரியம்தான். நான் கூட விரும்புவேன்; ஏனென்றால் மிதி படாமல், இடி படாமல் செல்லலாம் என்ற ஒரு அல்ப ஆசை.

நேற்று அலுவலகத்தைவிட்டு வீட்டிற்கு 12-Bல் செல்லாமல் அஷோக் பில்லர் வழியாக சென்றேன். அப்படி சென்றதால்தான் ஒரு பிரமிப்பூட்டும் விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது. அஷோக் பில்லரிலிருந்து போரூர் வரை பத்து ரூபாய் என்று ஒரு சொகுசான ஷேர் ஆட்டோ வந்து நின்றது(காலியாக). நான் அதிகமாக கேட்கிறானே என்று நினைப்பதற்குள் ஒருவர் முந்திக்கொண்டு ஏம்பா! ஐந்து ரூபாய்க்கு வரமாட்டியா? என்றார். ஆமாங்க! உங்களுக்கு இமயமலைக்கே போனால்கூட ஐந்து ரூபாய்தானா? இஷ்டம் இருந்தா ஏறுங்க; இல்லைன்னா விடுங்க! என்றான் ஆட்டோக்காரன். (நல்லவேளை நாம் பாட்டு வாங்கவில்லை என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.)

என்ன சார்! நீங்க வரீங்களா? என்றான். நான் தயங்கியவாறு எவ்வளவு என்றேன்.
சார்! விருகம்பாக்கம் வரை ஐந்து ரூபாய்; பிறகு போரூர் வரை பத்து ரூபாய் வரீங்களா, இல்லையா? சீக்கிரம் சார்-ஒரு முடிவு எடுங்க..
நான் யோசிப்பதற்குள் ஒருவர் ஏறி இடம்பிடித்துவிட்டார்; மனமில்லாமல் நானும் ஏறிவிட்டேன். வழியில் யாரும் ஏறாமல் ஆட்டோ பறந்தது. வழியேர எனக்கு ஒரே போதனைமயம். அவை பின்வருமாறு:-

* ஏன் சார்! நான் எவ்வளவு நியாயமாகக் காசு கேட்டேன்; ஏன் சார் தயங்குனீங்க?
* நான் மற்றவர்களைப்போல் அடாவடியாகவா கேட்டேன்; இல்லை திட்டினேனா?
* இனிமேல் இப்படி செய்யாதீங்க சார்! பில்லரிலிருந்து போரூர் வரை பத்து ரூபாய் அதிகமா என்ன?
* சார்! நான் மற்றவர்களைப்போல் எதிர் வாடையில் பலகைக்கூட போடவில்லை பாருங்கள்; எனக்கு மனுஷனை மதிக்கத்தெரியும்; மூன்றிலிருந்து நான்கு பேருக்கு மேல் நான் ஏற்றுவதே கிடையாது சார்!

நாங்கள் இருவரும் மட்டுமே பயணித்தோம். நான் இறங்கும் பஸ் ஸ்டாப் வருகையில்-டிரைவர் பஸ் ஸ்டாப்பில்தான் நிறுத்துவேன் என்று எதாவது கொள்கை வைத்துள்ளீர்களா? இல்லை சிக்னலில் இறங்கலாமா? என்றேன். அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்- நீங்க எங்க சொல்றிங்களோ அங்க நிறுத்தறேன் என்றான். அவசர அவசரமாகக் காசு கொடுத்துவிட்டு சிக்னலில் இறங்கி எதிரில் பார்க்கிறேன்...

பின்புறம் நான்கு பயணிகள்; அவர்களுக்கு எதிர்த்தாற்போல் நான்கு பயணிகள்(பலகையில்);துவாரபாலகர்கள்போல் டிரைவரின் இருபக்கங்களிலும் பயணிகள் என்று ஒரு ஷேர் ஆட்டோ வேகமாக உருண்டுக்கொண்டு வந்தது. பிறகுதான் என் போதனை குரு ஆட்டோவில் போதித்தது நினைவுக்கு வந்தது.

Comments:
ஷேர் ஆட்டோக்காரர் உங்ககிட்ட 'ஷேர்' பண்ணியதை பதிவுல எங்ககிட்ட 'ஷேர்' பண்ணியிருக்கீங்க! இனிமே அந்த ஆட்டோக்காரர் உங்க கண்ணுல பட்டா, உடனே 'ஆட்டோ 'மேட்டிக்கா உங்க காலு அந்த ஆட்டோவுல போய் ஏறிரும்னு நினைக்கிறேன்!
 
சென்னைல் "சாதாரன" ஆட்டோவை விட ஷேர் ஆட்டோ எவ்வளவோ வசதி விஜய். என்ன சொல்றீங்க!
அப்புறம் ஒரு 5ரூ பார்த்து இந்த பேருந்துல போறது இருக்கே. அய்யோ சாமி...

பரவாயில்லை.. நல்ல டிரைவர் தான் அவர் ! :)
வீ எம்
 
To V.M

Yes Your Honour...
 
சாதா ஆட்டோவை விட ஷேர் ஆட்டோ செலவு மிச்சம் போல தெரியுதே!
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?