Friday, April 22, 2005

 

11 Months Baby - 22Kg

இந்த அபூர்வ குழந்தை ஒரு நாளைக்கு ஏழு லிட்டர் பால், ஒரு கிலோ அரிசி(சோறு),சில பாக்கெட் பிஸ்கட், மற்றும் சில பல பழங்கள், காய்கறிகள் சாப்பிடுகிறதாம் - இது கதையல்ல நிஜம்; வெளிநாட்டில் அல்ல, நம் பாரத நாட்டில்தான்.(rediff.com news)

மேற்கு வங்கம், முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள பரிதார் கிராமத்தை சார்ந்தவர் கனேரா பீபி. இவரின் குழந்தை லோக்மேன் ஹக்கீம் அசுர வேகத்தில் வளர்கிறான். மூன்று மாதங்கள் வரை குழந்தை சாதாரணமாக வளர்ந்திருக்கிறான்; பிறகுதான் இந்த அசுர வளர்ச்சி. குழந்தையை தூக்கிக் கொஞ்ச முடியாத நிலைமை; நினைக்கவே பரிதாபமாக இருக்கிறது; அதுவும் ஒரே பிள்ளை. அந்த கிராமமே இந்த குடும்பத்தை ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்களாம்.

மருத்துவ உலகிற்கு ஒரு சவாலாக இருக்கிறான் ஹக்கீம். இவனுடைய மூளை செல்களில் சில பிரச்சினைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எங்கோ இருக்கும் அந்த குழந்தை விரைவில் குணமடைய நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

 

April-22 World Earth Day

April 22 - உலக பூமி தினம்

நம்மில் எத்தனை பேர் இந்த பொன்னான பூமியைப் பற்றி சிந்திக்க நேரமிருக்கிறது!! இன்று உலக பூமி தினம்.(பொதுவாக காதலர் தினம்,சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவற்றை நாடே கொண்டாடுகிறது) ஆனால் பூமித்தாயை போற்றுகின்ற நாள் ஒன்று இருப்பதே பல பேருக்கு தெரியாமல் இருக்கலாம். அமெரிக்காவில் இந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள்; நாமோ?! (சொல்லவும் வேண்டுமோ?)

பூமித்தாயைக் காப்பாற்றி நீருக்கடியிலிருந்து கொண்டு வந்தார் விஷ்ணு (வராக அவதாரமெடுத்து); அதனால்தான் என்னவோ வராகனுக்கு-நில அதிர்வை முன்கூட்டியே அறியமுடிகிறதோ!
பூமி அதிர்ச்சி, எரிமலை, போன்றவைகள் நிகழ்வதெல்லாம் இயற்கை மீது நாம் செலுத்தாத அக்கறை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

வளம் கொஞ்சும் பாரதத்தை உருவாக்க மரம் வளர்ப்போம். மரம் வளர்ப்போம் வளம் காப்போம்.
மழை நீர் சேகரிப்போம் - போன்ற பல சொற்றொடர்களை ஒருபுறம் தமிழக அரசு தன் பங்கிற்கு சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது; மறுபுறம் சாலையை அகலமாக்க மரங்களை வெட்டி வீழ்த்தியும்
வருகிறார்கள்.

பாரதியின் வரிகள்தான் நினைவிற்கு வருகிறது - நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைந்துவிட்டால்.........

இன்று இன்னொரு தினமாகவும் (என் வரையில்) கொண்டாடப்படுகிறது - நான் பிறந்த தினம்.

சரி நாளை என்ன தினம்? (இன்றைய தினமே பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை) நாளை?
நாளை (ஏப்ரல் 23 - உலக புத்தக மற்றும் காப்புரிமை தினம்) World Book & Copyright Day.

Wednesday, April 20, 2005

 

DECCAN CHRONICLE

சென்ற வாரம் முதல் "தி ஹிந்து"விலிருந்து "டெக்கான் க்ரானிக்கல்"க்கு மாறியிருக்கிறேன்.
அதுவும் ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு இருபத்தி ஏழு பைசாவிற்கு, அதாவது ஒரு வருடத்திற்கு ரூபாய் 99 மட்டுமே!! It is purely to catch the readership. பிறகு படிப்படியாக விலையை ஏற்றத்தான் போகிறார்கள்.
அதற்குள் மற்ற பத்திரிகையாளர்கள் விலையை கண்டிப்பாக குறைப்பார்களா?! நடக்கலாம்..

"தி ஹிந்து"வின் மார்க்கெட்டை வீழ்த்தவே க்ரானிக்கலின் சென்னைவாசம் என்கிறார்கள் சிலர்.. எது எப்படியோ ஒரு ரூபாய்க்கு நாளிதழ் என்றால் பேப்பர் படித்து பழக்கமில்லாதவர்கள்கூட வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.(பெயர்கூட சொல்லாமல் ஒரு ரூபாய் பேப்பர்) என்றே கேட்டு வாங்குகிறார்கள்.
வழக்கம்போல் எல்லா நாளிதழ்களிலும் வருவதுபோல் டி.வி செய்திகள்,விளையாட்டு,ஜோஸியம்,வெளிநாடு, சென்னையைச் சுற்றி, போன்ற பல தகவல்கள் அதிக பக்கங்களுடன் குறைந்த விலையில் கிடைக்கிறது. முழுவதும் படிக்க நேரம்?

தினம் ஒரு ரூபாய்க்கு ஒரு நாளிதழ் என்றால் விட மனசுவருமா? அதுவும் மாதத்திற்கு முப்பது ரூபாய் செலவழித்துவிட்டு, பேப்பர்காரரிடம் போட்டால் குறைந்தபட்சம் இருபத்தைந்து ரூபாயாவது நமக்கு திரும்ப கிடைக்குமே! (அல்ப ஆசை)

Thursday, April 07, 2005

 

NATURE

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் நான் படித்த கவிதைகளில் என்னை பாதித்த கவிதை ஷக்தி சேகரின் கைவண்ணத்தில் இதோ!!

இது கவிதை என்றால்
இயற்கைக்கு பெயரென்ன!

ஆஹா! எத்தனை அழகு! - அது
அன்பு மட்டும்தானா?
ஆசைக் கடலில் ஊற்றெடுக்கும்
அமுத வார்த்தைகளா!
இல்லை... இல்லை...
உண்மைக்கு இது மறுபெயரா?
இன்சொல் சொல்வாய் - உள்ளத்தில்
இனியெல்லாம் சுகமே.
இனிய செயல் செய்வாய்
பிறர் மனம் கனியவே!
இன்முகம் காட்டுவாய்
இதுதான் இயற்கை!
பொய்யும் புரட்டும் இல்லை
பொதுமை வேண்டிட
புதுமைகள் படைப்பாய்!
எல்லா ஜீவனுள்ளும்
என்றும் அமைதியைத் தருவாய்
எல்லையில்லா பேரின்பம் தரும் இறைவா!

இது கவிதை என்றால்
இயற்கைக்கு பெயரென்ன!

Friday, April 01, 2005

 

COMEDIAN

வாழவந்தானைப் பற்றி.....

ராம் திரைப்படத்தில் வரும் வாழவந்தானின் பெயர் 'கஞ்சா கருப்பன்' என்று ஆகிவிட்டது. இவர் ஏற்கனவே பிதாமகன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் தோன்றியவர். இயக்குநர் பாலாவின் தூரத்து உறவுக்காரர். சிவகங்கையைச் சார்ந்தவர். நடிப்பில் வெளுத்துவாங்குகிறார். இவர் வரும் காட்சிகளெல்லாம் கரவொலியிலும்,சிரிப்பொலியிலும் அரங்கமே அதிர்கிறது.

இவர் பிதாமகனில் நடித்தபொழுதே இயக்குநர் அமீரின் அறிமுகம் கிடைத்ததாம். அப்பொழுதே அமீர் இவரிடம் சொல்லிவிட்டாராம்... என்னுடைய படத்தில் ஒரு காமெடி ரோல் உள்ளது; அதனை நீதான் செய்யவேண்டும் என்று. சொன்னபடியே செய்திருக்கிறார் அமீர். வாழ்த்துக்கள்...

ராமில் அவரின் அறிமுக காட்சியே அமர்க்களப்படுகிறது. குறிப்பாக போலிஸிடம் உதை வாங்கும் காட்சிகள், கதாநாயகியிடம் காசு கேட்கும் இடம், ராம் என்று நினைத்து கட்டையை எடுத்து அவர் மனைவியையே பொளக்கும் காட்சி, ரஹ்மானிடம் சிக்கன் பிரியானி கேட்குமிடம் என்று அனைத்து இடத்திலுமே கரகோஷம் பெறுகிறார்.

என்னுடைய கவலையெல்லாம் - இந்த போட்டி நிறைந்த சினிமா தொழிற்சாலையில் வாழவந்தானை நன்றாக வாழவைக்கவேண்டுமே!! என்பதுதான்.

This page is powered by Blogger. Isn't yours?